கீழ்பென்னாத்தூரில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

கீழ்பென்னாத்தூரில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், பஸ் கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூரில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
Published on

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அருகே உள்ள ஐங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). பிளக்ஸ் பேனர் டிசைனர். இவரது மனைவி அன்பரசி (23). இவர்களுக்கு 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை சக்திவேலு, தனது மனைவியுடன் பைக்கில் சோமாசிபாடி வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்றார். சோமாசிபாடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பைக்கை வலது பக்கமாக திருப்பினார்.

அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை சக்திவேல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி அன்பரசி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரும், கண்டக்டரும் நடுரோட்டிலேயே பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அரசு பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

பிறகு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவாலி பிரியா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு, கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சுகுணா மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. பாதுகாப்பு கருதி, அதிரடி படை போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். படுகாயமடைந்த அன்பரசி சிகிச்சைக்காக திருவண்ண மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பலியான சக்திவேலின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com