

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. ‘நேட்டிவிட்டி சர்ச்’ என்றழைக்கப்படும் இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டம் மிக சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ், பிரதமர் ரமி ஹம்டல்லா மற்றும் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று, சூரியன் மறைந்த பின்னர் இஸ்ரேல் ராணுவத்தின் சோதனைச்சாவடி எல்லையை கடந்து அந்நாட்டின் ரோமானிய கத்தோலிக்க தலைமை பேராயர் பியர்பட்டிஸ்ட்டா பிஸாபல்லா ‘நேட்டிவிட்டி சர்ச்’ அமைந்துள்ள பாலஸ்தீனம் பகுதிக்கு வந்தார். அவரை ஆடல், பாடல் மற்றும் இயேசுவைப் பற்றிய துதிப்பாடல்களுடன் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை உடுத்திய சிறுவர்-சிறுமியர் வாணவேடிக்கைகளை கண்டு களித்தனர்.
உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக் மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர்.
இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.