

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருந்தது. கேப்டன் விராட் கோலியுடன் கும்ப்ளேவுக்கு கருத்து வேறுபாடு நிலவுவதால் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாயின.
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், இந்திய ‘ஏ’ அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் கும்ப்ளே ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் லண்டனில் நேற்று முன்தினம் கூடி சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்று இருப்பதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை உடனடியாக நீக்க வேண்டாம் என்று ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ராஜீவ் சுக்லா, சி.கே.கண்ணா ஆகியோரும் பயிற்சியாளராக கும்ப்ளே நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கேப்டன் விராட்கோலி மட்டும் கும்ப்ளேவை அந்த பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கேப்டன் சொல்வதற்காக பயிற்சியாளரை காரணம் இல்லாமல் நீக்கினால் அது தவறான முன்உதாரணமாக அமைந்து விடும் என்று நிர்வாக கமிட்டியினர் முடிவு எடுக்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
ஆலோசனை கமிட்டி கூட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு பணிகள் குறித்து ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர். பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.