

திருப்பூர்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர். லே அவுட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவக்குமார்(23) என்பவரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இவர்கள் பனியன் நிறுவன வளாகத்தில் உள்ள அறைகளில் தங்கியிருந்து பணியாற்றினார்கள்.
சம்பவத்தன்று 19 வயது வாலிபர் தனது மாநிலத்தை சேர்ந்த 5 பெண்களை அழைத்து வந்து தான் தங்கியிருந்த அறையில் தங்க வைத்ததாக தெரிகிறது.
இதற்கு அருண்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிந்த பனியன் நிறுவன மேலாளர் சிவன், அங்கு வந்து வாலிபரை கண்டித்து விட்டு சென்றுள்ளார். இதில் அருண்குமாருக்கும், வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரவு பனியன் நிறுவனத்துக்குள் அருண்குமார் இருந்துள்ளார். அப்போது 19 வயது வாலிபரும், சிவக்குமாரும் அங்கு வந்துள்ளனர். சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண்குமாரின் நெஞ்சு பகுதியில் குத்தியதாக தெரிகிறது.
வாலிபர், பனியன் நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த வேனின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அருண்குமாரை மீட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், வாலிபர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.