டேக்ராடூன்:
உத்தரகண்ட் மாநிலம், டேக்ராடூனிலுள்ள இந்திய மிலிட்டரி அகாடமி (ஐ.எம்.ஏ) பயிற்சிக் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற 78 நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 487 பயிற்சி ராணுவத்தினரின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வங்காளதேச ராணுவ தலைமை தளபதி அபு பிலால் முகமது சைபுல் ஹக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் இந்திய ராணுவ பயிற்சி முறை குறித்து பெருமையாக பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-
இந்த ராணுவ அகாடமியில் பெற்ற பயிற்சியின் மீது அனைத்து வீரர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், உங்களுடையை நாட்டுக்காக உயிரையும் கொடுத்துப் பணியாற்ற வேண்டும். இந்திய ராணுவ அகாடமியின் பயிற்சித் தரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்தப் பயிற்சியின் மூலம், உங்களது ராணுவத்துக்காக நீங்கள் மிகச் சிறந்த முறையில் பணியாற்ற முடியும்.
ராணுவ வீரர்களின் பணி என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தச் சவால்களின் மூலம் பாடம் கற்று, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, கடும் உழைப்பு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும். வங்கதேச விடுதலைக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த மாணவர்களின் அணிவகுப்பைப் பார்வையிடக் கிடைத்த வாய்ப்பை, எனக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன். இதன் மூலம், இந்திய வங்கதேச நல்லுறவு மேலும் வலுப்பெறும்
இவ்வாறு அபு பிலால் முகமது சைபுல் ஹக் பேசினார். இந்திய மிலிட்டரி அகடாமியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.