

வாரணாசி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கடந்த வாரம் நடந்த ஈவ்-டீசிங் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் மாணவிகள் மற்றும் பெண்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த கலவரத்தை பல்கலைக்கழகத்துக்கு வெளியிலுள்ள சக்திகள் தூண்டிவிட்டதாக துணைவேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் துணைவேந்தர் திரிபாதி மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அவரது குற்றச்சாட்டுக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
திரிபாதி நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் அடுத்த துணைவேந்தரை நியமனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், துணைவேந்தர் பதவியிலிருந்து திரிபாதியை நீக்க வேண்டும் என டெல்லி மாநில பெண்கள் ஆணையம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.
இதற்கிடையே, பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் திரிபாதி, காலவரையற்ற விடுப்பில் சென்றுள்ளார் என பலகலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தராக நீரஜ் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், துணை வேந்தர் திரிபாதி வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். அவர் சொந்த காரணங்களுக்காக காலவரையற்ற விடுப்பில் சென்றுள்ளார். எனவே பல்கலைக்கழக பதிவாளராக இருந்து வரும் நீரஜ் திரிபாதி தற்காலிக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.