

மீரட்:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் ஆசம்கான். இவர் அவ்வப்போது பரபரப்பாக பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன், ராம்பூரில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ‘காஷ்மீர், ஜார்க்கண்ட், திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட ராணுவ வீரர்களின் உறுப்புகளை பெண்கள் வெட்டி வீசிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினரின் செயல் மிகவும் வெட்கக் கேடான ஒன்றாகும்’ என்று பேசினார்.
அசம்கானின் இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்களை அவமரியாதையாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தேசத்தை அவமதிக்கும் வகையில் பேசிய அசம்கான் மீது மீரட் நகரில் உள்ள சந்த்பூர் போலீசில், வி.ஹெச்.பி தலைவர் அனில் பாண்டே புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சந்த்பூர் போலீசார் சமாஜ்வாடி தலைவர் அசம்கான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், ராம்பூர் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீசில், பா.ஜ.க மந்திரியின் மகன் ஆகாஷ் சக்சேனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மற்றொரு வழக்கைப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அசம்கான் நாக்கை அறுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சஹஜான்புர் வி.ஹெச்.பி மாவட்ட செயலாளர் ராகேஷ்குமார் அவஸ்தியும், தீவிரவாதி அசம்கான் தலையை கொண்டு வருபவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் முகேஷ் படேலும் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.