அன்னாஹசாரேவுடன் இணைந்து டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு

டெல்லியில் அன்னாஹசாரேவுடன் இணைந்து மார்ச் மாதம் 23-ந்தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Published on

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு சுவாமிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும், அதற்கான இழப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை.

பிரதமர் மோடி விவசாயிகளை பார்த்தால் பாவம், என கருதுகிறார். விவசாயிகளை பாவப்பட்ட ஜென்மம் என நினைக்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் விவசாயிகள் என பேசுகிறார். அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகிறார். விவசாயிகள் மீது நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்காக தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறோம்.

வரும் 9-ந் தேதி திருவண்ணாமலையில் சுவாமியின் பாதத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வைத்தும், மார்ச் மாதம் 23-ந் தேதி டெல்லியில் மீண்டும் நடைபெறும் போராட்ட விளக்க பிரசுர நோட்டீஸ்களை வைத்தும் வழிபாடு செய்ய உள்ளோம்.


சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்காக வழிபாடு செய்தோம். வரும் 10-ந்தேதி மதுரையில் அன்னாஹசாரே தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த மாதம் 21,22 ம் தேதியில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 23 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு உரிய பயிர் கடன் வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைத்து தேசியமயமாக்க வேண்டும். 60 வயது பூர்த்தியான விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் மார்ச் 23-ந் தேதி டெல்லியில் அன்னாஹசாரேவுடன் இணைந்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com