

மணப்பாறை:
மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்திட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் சென்னை வரை 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 1-ந்தேதி குமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இன்று காலை மணப்பாறைக்கு வந்த விவசாயிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இன்று பலரும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆகவே இந்த மரபணு மாற்றப்பட்ட விதை என்பது மிகவும் கொடியது என்பதால் தான் அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதையை விவசாயத்தில் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பொறுத்தவரை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. பிரதமர் நினைத்தால் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட முடியும். ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இன்று மாலை வரை பொறுத்திருப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காகத் தான் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகள் டெல்லியில் சென்று தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். #tamilnews #ayyakannu #farmersprotest #cauveryissue