வீடும் வாழ்வும் - தலைவாசலும் கதவும் வைக்கும் முறை? ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

ஒரு மனிதனுக்கு முக அழகு எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு வீட்டிற்கு முகப்பு அழகும் அதைவிட தலைவாசல் அழகும் முக்கியம்.
தலைவாசலும் கதவும் வைக்கும் முறை
தலைவாசலும் கதவும் வைக்கும் முறை
Published on

சிலர் தங்கள் வீடுகளில் தினசரி தவறாமல் பூஜைகள் செய்வதுடன் வீட்டுத் தலைவாசலுக்கும் பூஜை செய்கிறார்கள்.

ஏன் இப்படிச் செய்கிறார்கள். தலைவாசல் என்பது தங்கள் வீட்டு பூஜை அறைக்கு சமமான இடமா? என்று சிலர் நினைப்பதுண்டு. இந்த செய்திகளை வாஸ்துவின் அடிப்படையில் மிகத் தெளிவாகக் காண்போம்.

அதாவது வீடு என்றாலே முதலில் இடம் பிடிப்பது தலைவாசல். சிலர் தலைவாசலுக்கு சரமாலை இடுவதும் தவறாமல் குங்கும் திலகமிடுவதும் இன்னும் சிலர் கதவுகளில் சாமி படங்களைச் செதுக்கி அதற்கும் பூஜை செய்வதும் நாம் வழக்கத்தில் கண்டு வருகிறோம்.

இதற்கு வாஸ்து சாஸ்திரப்படி சில கோட்பாடுகள் விதிகள் சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி பார்த்தால் வீடுகளில் உள்ள எல்லாவிதமான தலைவாசலுக்கும் இந்த பூஜைகள் பொருந்தாது.  இந்த பூஜைகளால் பயன் ஒன்றும் வரப்போவதில்லை.

சரி, அப்படியானால் எந்த மாதிரியான தலைவாசலுக்கு பூஜைகள் பொருந்தும் என்ற சூட்சும விதிகளை இங்கே காண்போம்.

முதலாவதாக இங்கே நான் குறிப்பிடப்போகும் அளவுகள் தலைவாசல் நிலைக்காலின் உள் அளவுகள் மட்டுமே.

நீங்கள் எவ்வளவு பெரிய மரத்தில் வேண்டுமானாலும் நிலையை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உள் அளவுகளே கணக்கில் கொள்ளப்படும்.

தலைவாசலை நம் முன்னேர்கள் சாஸ்திர அடிப்படையில் மூன்று வகைகளாக பிரித்துள்ளனர். அவை முறையே:-

1. நவக்கிரக தலைவாசல்

2. குபேர தலைவாசல்

3. சூரியச் சந்திர தலைவாசல்

என இவ்வாறு சொல்லியுள்ளார்கள். இப்போது இவைகளை பார்ப்போம்.

முதலில் நவக்கிரகத் தலைவாசல்: இந்த நவக்கிரகத் தலைவாசலுக்கு என்று சில அளவீடுகள் உள்ளது. அதாவது 37ஙீ71 இன்ச் என்பதாகும். இதில் ‘37’ என்பது வாசல்காலின் அகலமெனவும், 71 என்பது வாசல்காலின் உயரம் எனவும் கொள்ளவும்.

இதில் உள்ள 37x71 என்ற எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் அதாவது 37+71=108  என்ற எண் வரும். இப்படி வரும் இந்த அளவில் வரும் வாசல்கால் ‘நவக்கிரக வாசல்’ எனப்படும்.

இதையே இன்று சில இடங்களில் இந்த அளவு மாற்றப்பட்டு 37x69 எனவும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நவக்கிரக வாசலுக்கு வரும் கதவில் பாதிக்கு மேல் பாகத்தில் விநாயகர் படமும், கதவின் பாதிக்குக் கீழ்பாகத்தில் காமதேனுவின் படமும் வரும்படி மரத்தில் செதுக்கி கதவாகப் பயன்படுத்த வேண்டும்.

மேலே சொன்ன 37x71 என்ற அளவில் உள்ள நவக்கிரக வாசல், உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து வீடு கட்டியிருந்தால் இப்படிப்பட்ட வீட்டில் பூஜை அறைக்கு நிகராக இந்த தலைவாசல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த வீட்டில் பூஜை அறையில் பூஜை முடிந்தவுடன் அடுத்ததாக தலைவாசலுக்கும் பூஜை போட வேண்டும். நிலையின் இரண்டு சட்டங்கள் வழியாக சரமாலையை தொங்க விட்டு மேல் சட்டத்திலும் பூவைத்து அல்லது தினசரியும் மாவிலை தோரணம் கட்டி கதவில் உள்ள விநாயகருக்கும் பூஜை செய்துவர வேண்டும்.

இந்த பூஜையானது தினசரி நடப்பது வழக்கம். இப்படியான வீடுகள் கோவிலுக்கு நிகரான புனிதத் தையும் மங்களத்தையும் பெற்று அந்த வீட்டில் உள்ள அனைவரும் எல்லா சகல விருத்திகளோடும் வாழும் பாக்கியம் கிட்டும்.

இரண்டாவதாகக் ‘குபேரத்தலைவாசல்’ பற்றி இங்கே காணலாம்.

இந்த குபேரத் தலைவாசல் நிலையின் உள் அளவுகளாக 33க்கு 66 என்ற அளவு வரும். 33ஙீ66. இதில் 33 என்பது தலைவாசலின் அகலமெனவும் 66 என்பது தலைவாசலின் உயரம் எனவும் புரிந்து கொள்ள வேண்டும்.

வாஸ்து சாஸ்திரப்படி இதுவும் மிக அற்புதமான அளவாகவே கருதப்படுகிறது. இந்த 33+66 எனக் கூட்டினால் முடிவு 99 எனவரும்.

இந்த மாதிரி ‘குபேரத்தலைவாசல்’ வைத்து வீட்டைக் கட்டும் போது தலைவாசலின் கதவில் பாதிக்கு மேல் பாகத்தில் மகாலட்சுமி படமும், அதே கதவின் பாதிக்குக் கீழ்பாகத்தில் அன்னலட்சுமி படமும் வரும்படி செய்து கொள்ள வேண்டும்.

சும்மா திறந்து மூடும் கதவுக்கு இத்தனை விதிகளா? எனக் கேட்கத் தோன்றும். ஆம் இதுதான் நமது பாரம்பரியம். இப்படி குபேரத் தலைவாசல் வைத்து வீடு கட்டினால் நீங்கள் ஒருவேளை தினசரியும் பூஜை அறையில் பூஜை செய்தாலும் கட்டாயமாக உங்கள் வீட்டுத் தலைவாசலுக்கும் தவறாமல் வாரத்தின் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும்.

இப்போது புரிகிறதா ஏன் தலைவாசலுக்கு பூஜை செய்கிறார்கள் என்று விளங்குகிறதா?

மூன்றாவதாக ‘சூரிய சந்திரத்தலைவாசல்’ இந்த சூரிய சந்திர தலைவாசல் உள் அளவுகளாக முறையே 33ஙீ69 இன்ச் என்ற அளவில் இருக்கும்.இவ்வாறு உள்ள அளவு சூரியச் சந்திர தலைவாசல் என கொள்ளப்படுகிறது. இதில் 33 என்பது நிலையின் அகலமாகவும், 69 என்பது நிலையின் உயரம் என்றும் கணக்கில் கொள்ளவும்.

இந்த 33+69 எனில் 102 என வரும். இந்த மாதிரியான அளவுகளில் நிலை அமைக்கும் போது கதவில் மரத்தாலேயே கதவின் பாதிக்கு மேல் பாகத்தில் ஏதோ ஒரு அம்பாள் படமும், நிலையில் நாக பந்தமும் அமைத்துக் கொள்தல் உண்டு.

இந்த மாதிரியான வீடுகளில் நீங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் தினசரி பூஜை செய்தாலும் கண்டிப்பாக வாரத்தின் திங்கட்கிழமை தலைவாசலுக்கு தவறாமல் பூஜை செய்ய வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் சில வீடுகளில் இந்த மாதிரியான தலைவாசல் பூஜைகள் செய்யப்படும்.

மாறாக ஏதோ ஆர்வக் கோளாறில் பூஜை செய்வது என்பது அதுவும் ஒரு பொழுது போக்கு.

இவ்வாறு நிலைச்சட்டங்கள் செய்யும் போது இரண்டு பக்கவாட்டில் உள்ள மரமும் மேலே உள்ள சட்டமும் ஒரே மரமாகவும், கீழே உள்ள மரம் வேறு ஒரு பால் மரமாகவும் செய்வது உண்டு.

குறிப்பாக நிலைகள் செய்ய உகந்த மரங்களாக தேக்குமரமும் கிராமங்களில் நிறைய பேர் வேம்பு மரத்தில் நிலைச் சட்டங்கள் செய்வார்கள்.

பூவரசு மரத்திலும் வேங்கை மரம், கோங்குமரம், படாக் மரம் என இவற்றில் தலைவாசல் செய்துண்டு. இந்த மரங்களில் இரண்டு பக்கவாட்டுச் சட்டங்கள் மேலும் மேல் சட்டம் செய்து கொண்டு கீழே உள்ள படிச்சட்டத்திற்கு பால் மரங்கள் பயன்படுத்துவதுண்டு.

குறிப்பாக பால் மரங்களில் இலுப்பை மரம், இருளி மரம், எட்டி மரம் போன்றவற்றில் கீழ்ப்படிச்சட்டம் அமைய வேண்டும்.

இப்படி அமைக்கப்படும் கீழ்படிச்சட்டங்களை மிதித்து வீட்டுக்குள் செல்லக்கூடாது. மட்டுமல்லாமல் பொதுவாகவே கீழ்படிச்சட்டங்களில் ஏறி, மிதித்து வீட்டுக்குள் செல்லுவது வாஸ்துவின்படி குற்றமாகும் தோஷமாகும்.

மேலும் அன்றைய பழைய வீடுகளை பார்த்தால் தெரியும். அந்த வீட்டின் உள்ளே உள்ள அறைகளின் கதவு உயரங்களைவிட தலைவாசல் சற்று உயரம் குறைவாகவே இருக்கும்.

இதன் காரணம் என்னவெனில் தலைவாசலில் உள்ள அளவுகளின் படியே அங்கேயே நவக்கிரகங்கள், குபேரன் மற்றும் சூரிய சந்திரர்கள் நிறுவப்பட்டுள்ள காரணத்தால் அவர்களுக்குத் தலை வணங்கித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்ற கோட்பாடு தான் அது.

இன்றெல்லாம் வீடு கட்டுபவர்கள் என்னன்ன அளவுகளிலோ எல்லாம் நிலைகளும், கதவுகளும் அமைக்கிறார்கள்.

மேலும் இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்பு என்று வந்தபின் இந்த மாதிரியான பூஜைகளுக்கு இட வசதியும் இல்லை. மக்களுக்கு நேரம் கால அவகாசமும் இல்லை.

அதுபோக வீட்டைக்கட்டி கொடுக்கும் அந்த தொழில் நிறுவனம் வியாபார நோக்கோடு செயல்படுவதால் வீடு வாங்கும் அனேகர்களுக்கு வீட்டின் தலைவாசலின் அளவுகளும் தெரிவதில்லை. என்ன மரத்தில் கதவு உள்ளது என்ற விவரமும் புரிவதில்லை.

குறிப்பாக தேக்குமரக் கதவும், நிலைகளும் நீண்ட நாட்கள் உழைக்கும் என்பது மட்டுமின்றி வருங்காலங்களில் கரையான் தொல்லைகள் இல்லாமல் இருக்கும். ஆனால் விலை அதிகம். அதிலும் குறிப்பாக பர்மா தேக்கு என்பதே முதல் தரம். இது போக இன்று ஆப்பிரிக்காவில் இருந்து வரும் கானாத்தேக்கும் உண்டு.

வேம்பு மரம் கொண்டு தலைவாசல் நிலைக்கதவுகள் அமைப்பது மிக உத்தமம். ஆனால் காலப்போக்கில் நிலைக்கதவில் வெடிப்புகள் தோன்றும். ஆனாலும் வேம்பு மரம் என்பது அம்பாளுக்கு உகந்தமரம் என்பதால் இந்த வேம்புமரத்தில் நவக்கிரகத் தலைவாசல் அமைத்து தினசரி பூஜை செய்து வருவது மிக விசேசம்.

இந்த வீடு தெய்வாம்சமாகவும் அதே நேரம் வீட்டில் பெண்கள் சுகம் பெறுவதியும் அமையும். ஏனெனில் நாம் ஏற்கனவே பல கட்டுரைகளுக்கு முன்பே வீடு என்பது பெண்களுக்கே என்று கூறியுள்ளோம்.

மனையாள் எனில் மனையை ஆள்பவள் என்றே பொருள். ஆகையால் வேம்பு மரம் மிகவும் விசேசம் பெறுகிறது.

உங்களின் பணவசதிகளைப் பொறுத்து மரங்களைத் தெளிவு கொள்ளலாம். ஆனால் உள் அளவுகளே மிக முக்கியமாகும்.

இதுபோல வீட்டில் கதவுகள், ஜன்னல்கள் அமைக்கும் போது எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் அந்த எண்ணிக்கையானது இரட்டைப்படை எண்ணிக்கையில் வரவேண்டும். இரண்டு, நான்கு, ஆறு என்று வரவேண்டும்.

இதில் சாமி அறை வாசல் முதல் குளியல் அறை வாசல் வரை எண்ணிக்கொள்ள வேண்டும். அதேபோல கதவுகளையும், நிலைச் சட்டங்களையும் இணைக்கும் கதவு இணைப்பான்களும் இரட்டைப் படையில் வரவேண்டும். அதாவது இரண்டு, நான்கு என்று வருதல் நல்லது.

நம்முன்னேர்கள் வீடு கட்டும் போது ஒரு தலைவாசல் வைப்பதற்கே எப்படியெல்லாம் கோட்பாடுகள் வைத்தார்கள் என்று பார்க்கும் போது ஆச்சரியமே.

இதுபோல் அடுத்த வார தொடரில் வீட்டுக்குள் மின் தூக்கி எனும் லிப்ட் எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்றும் மேலும் சில முக்கிய விளக்கங்கள் தரப்படும்.

தொடர்ந்து நமது கட்டுரைகளைப் படித்தீர்களானால் கண்டிப்பாக வீடு கட்டும் போது குழப்பம் நீங்கித் தெளிவாக வீட்டைக் கட்டிக் கொள்ளலாம் என்பது தெளிவு. 

X

Maalai Malar
www.maalaimalar.com