

எனவே சிறிய வீடானாலும், பெரிய வீடானாலும் அந்த வீட்டில் சமையல் அறை சரியானபடி அமைத்துக் கொள்ளாவிட்டால் வயதுக்கு மீறிய வியாதிகளும், கணவன்-மனைவி, பிள்ளைகள் எனஅமர்ந்து உண்ண முடியாத நிலைகளும் உண்டாகும்.
அதாவது சமையல் அறை அமைப்பதற்கான இடங்களாக வீட்டில் இரண்டு இடங்களைத் தெரிவு செய்யலாம். இந்த நிலையானது எந்த திசையில் நீங்கள் உங்கள் வீட்டுத் தலைவாசல் வைத்துக் கட்டி இருந்தாலும் சரி, இதில் முதலாவது இடமாக வாஸ்துப்படி நாம் தேர்வு செய்வது தென்கிழக்கு மூலையாகும். அதாவது தெற்கும், கிழக்கும் இணைகின்ற இடத்தில் கிடைக்கும் இடமே தென்கிழக்கு ஆகும்.
கிழக்கும் மேற்குமாக நீண்டவாக்கில் அமையலாம். இதே போல தெற்கும் வடக்கும் நீண்டவாக்கில் அமையலாம். இப்படி அமைந்தால் நிச்சயம் இந்த அறையானது செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும்.
இதிலும், குறிப்பாக முதல் தரமானது என்றால் இந்த செவ்வக வடிவில் அமைந்த அந்த அறையானது கிழக்கு மேற்காக அமைந்தால் மிக்க நன்று. இதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்ன என்பதை அப்புறம் சொல்வேன்.
இப்படி கிழக்கு மேற்குமாக நீண்டு உள்ள இந்த சமையல் அறையில் அந்த அறையின் கிழக்குச் சுவற்றில் அடுப்பு வைப்பதற்கான மேடை அமைக்கலாம்.
தேவைக்காக இந்த மேடையை கிழக்குச் சுவற்றில் துவங்கி தொடர்ந்து தெற்கு சுவற்றிலும் அமைத்துக் கொள்ளலாம். வடக்கு சுவற்றில் சமைப்பதற்கான அடுப்பு வைப்பதற்கு மேடை போடக்கூடாது. சமையல் அறை என்றாலே அங்கு அடுப்பு வைப்பதற்கான மேடையும் பொருட்களை வைத்துக்கொள்ள ஓர் அலமாரியும், பாத்திரங்கள் கழுவ சின்க் இருக்க வேண்டும்.
சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை உங்களது வலது பக்கத்திலும், புழங்கிய கழுவ வேண்டிய பாத்திரங்களை உங்களது இடது பக்கத்திலும் இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது கழுவ வேண்டிய பாத்திரங்களை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில், அதாவது கிழக்கு தெற்குச் சுவற்றில் மேடை அமைத்தோம் அல்லவா, கிழக்கு மேடையின் வடக்கு ஒரத்தில் அதே நேரம் வடக்குச் சுவற்றில் ஒட்டாதபடி அந்த மேடை அமைத்து அந்த மேடையின் வடகிழக்கில் பாத்திரம் கழுவ தேவையான தொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல பரண், கபோடு அமைக்க வேண்டுமாயின் சமையல் அறையின் தெற்கு மற்றும் மேற்கும் சுவற்றில் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த கபோடு மற்றும் பரண்கள் அமைக்கும் போது, வடக்குச் சுவற்றில் அமைத்தால் அந்த வீட்டில் உள்ள குறிப்பாக சமைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும்.உற்சாகமன நிலை பாதிக்கப்பட்டு என்ன சமைப்பது என்ன சமைப்பது என்று மனம் குழப்பமடையும் ருசியாக சமைக்கக் கற்றவர்களுக்குக்கூட குழப்பமாகி ருசியற்ற உணவு வந்து சேரும்.
குறிப்பாக ஒரு வீட்டில் பெண்ணானவள் மன அமைதியோடும், உற்சாகத்தோடும் இல்லையெனில் அந்த குடும்பம் உருப்படுவது கடினம். குறிப்பாக சமையல் பொருட்கள் வைக்க வேண்டிய கபோடு, எப்போதும் சமையல் அறையின் மேற்கு சுவற்றில் அமைவது மிக நல்லது. ஏனெனில் கிழக்குச் சுவற்றைச்சார்ந்து சமையல் மேடையும் மேற்குச் சுவற்றில் கபோடும் அமைத்துக் கொண்டால் அந்த அறையில் நின்று வேலை செய்யும் பெண் எப்போதும் கிழக்கும், மேற்கும் நடமாடிக் கொண்டே இருப்பாள்.
சில வரிகளுக்கு முன் சமையல் அறை என்பது கிழக்கும், மேற்கும் நீண்டவாக்கில் செவ்வக வடிவில் இருந்தால் மிக்க நன்மை எனச் சொன்னேனல்லவா? ஏனெனில் குறிப்பாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் சமையல் அறை அமைத்து அந்த அறைக்குள் பெண் கிழக்கு, மேற்கு பார்த்து அதிகம் நடந்து கொண்டிருந்தால் அந்த பெண் இயற்கையாகவே இனம்புரியாத ஒரு சக்தியை பெறுகிறாள்.
இதே சமையல் அறை, வடக்கு தெற்கு நீண்டிருந்து, அந்த பெண் இந்த சமையல் அறையில் தெற்கு, வடக்காக நடமாடிக் கொண்டிருந்தால் அவள் என்னவென்று தெரியாமல் தனது உடலின் சக்தியை விரயம் செய்கிறாள்.
இவ்வாறு சமையல் அறை அமைக்கும் போது கிழக்குச் சுவற்றில் மட்டும் ஜன்னல் அமைத்துக் கொள்ளுதல் மிகச்சிறப்பு இடமிருப்பின் வடக்குச் சுவற்றில் ஜன்னல் அமைக்கலாம். மேலும் சமையல் அறைக்குள் நுழையும் வாசலானது வடமேற்கில் மேற்கு நோக்கி அமைப்பது நல்லது. அதாவது மேற்குச் சுவரும், வடக்கும் சுவரும் இனைகிற வடமேற்கில், மேற்கு நோக்கி வைப்பது உத்தமம். இப்படி அமைந்த சமையல் அறைக்கு வடக்கு பக்கத்தில் உணவு உண்ணும் அறை என டைனிங் டேபிள் போட்டு உணவருந்துவது மிக நன்மை. இனி இரண்டாவது அம்சமாக இருக்கக்கூடிய வடமேற்கு மூலையில் சமையல் அறையை எப்படி அமைப்பது எனப்பார்ப்போம்.
உங்களது வீட்டின் மேற்குச் சுவரும், வடக்கு சுவரும் சேருகிற வடமேற்கில் உள்ள உங்கள் சமையல் அறையும் சதுரமாக இல்லாமல் செவ்வக வடிவில் அமைவது உத்தமம்.
பொதுவாக வீட்டின் எந்த ஒரு அறையானாலும் குறிப்பாக சதுர வடிவில் அறை அமைவது நல்லதல்ல. செவ்வக வடிவ அறைகளே உத்தமம்.
இதுபோல வடமேற்கு சமையல் அறையும் செவ்வக வடிவில் அமைந்து இந்த அறையில் நின்று சமைப்பதற்கான மேடையை மேற்குச் சுவற்றில் உட்காரும்படி போட்டுக் கொள்ளவேண்டும்.
உங்கள் மனதில் மேற்கு நோக்கி நின்று சமைக்கலாமா? எனக்கேள்வி எழும். வடமேற்குச் சமையல் அறையில் நின்று சமைப்பவர்கள் தாராளமாக மேற்கு நோக்கி நின்று சமையல் செய்யலாம்.
இங்கே சமையலுக்குத் தேவையான பொருள்களுக்கான அலமாறி அல்லது கபோடு, நின்று சமைப்பவரின் இடது பக்கத்திலும், பாத்திரங்கள் கழுவுவதற்கான சின்க் நின்று சமைப்பவரின் வலது பக்கத்திலும் அமையுமாறு செய்து கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் இடவசதியைப் பொறுத்து சமைக்கும் திசையை வடக்கு முகமாகவும் அமைத்துக் கொள்ளலாம். சில பேர்களுக்கு சந்தேகம் வருவதுண்டு. சமையல் பன்னும் போது கிழக்கு நோக்கி மட்டும் தானே சமைக்க வேண்டும் என நினைக்கலாம்.
பொதுவாகவே சமையல் அறை தென்கிழக்கு, வடமேற்கில் இருப்பது தவறில்லை என்று சொல்லியுள்ளோம். இதில் தென் கிழக்குச் சமையல் அறையில் மட்டும்தான் சமைப்பவர்கள் கிழக்கு நோக்கி நின்று சமைக்க வேண்டும். ஆனால் வடமேற்கு மூலையில் சமையல் அறை வைக்கும் போது, மேற்கு நோக்கி, வடக்கு நோக்கி நின்று சமைக்கலாம்.
வசதியிருப்பின் முடிந்த மட்டும் வடமேற்கு மூலை சமையல் அறையில் கிழக்கு நோக்கி நின்று சமைப்பதைக் தவிர்க்கலாம். வடமேற்கு மூலையில் உள்ள சமையல் அறையானது முடிந்த மட்டும் வடக்கு, தெற்குமுகமாக நீண்டிருக்கும்படி கட்டிக்கொண்டால் சிறப்பு.
ஏனெனில் இந்த சமையல் அறையில் நடமாடுபவர்கள் தெற்கு வடக்காக நடமாடினால் குறைவற்ற நோயற்ற வாழ்வு வாழலாம். மட்டுமின்றி ருசியான சாப்பாடும் கிடைக்கும்.
இதேபோல நீங்கள் நிலம் வாங்கி சொந்தமாக வீடு கட்டுபவராயின் இந்த இரண்டு மூலைகளில் சமையல் அறை அமைக்கும் போது மற்ற தரைத்தளத்தின் சம நிலையைவிட சற்று உயர்வாக அதாவது ஒரு டைல்ஸ் உயரத்திற்காவது உயர்த்தி தரைத்தளத்தை அமைப்பவது விசேசம்.
வடமேற்கு மூலையில் உள்ள உங்கள் சமையல் அறையில் பரண் அமைக்க வேண்டுமாயின், மேற்குச் சுவற்றிலும், தெற்குச் சுவற்றிலும் பரண்கள் அமைக்கலாம்.
குறிப்பாக வடக்கு நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டியுள்ளவர்களுக்கும், தெற்கு நோக்கித் தலைவாசல் வைத்து வீடு கட்டியுள்ளவர்களுக்கும் இந்த வடமேற்கு மூலையில் சமையல் அறை அமைப்பது மிக உத்தமம்.
குறிப்பாக இந்த வீட்டில் பெண்கள் நிறைவாக வாழுவதும், நோயின்றி இருப்பதும், அந்த வீட்டின் ஆண்கள் கடினமாக உழைப்பதும், நீதி, நேர்மை கொண்டு வாழுவதும், இந்த வீட்டின் குறிப்பாக பெண் குழந்தைகள் மிக பிரமாதமாக வெற்றிகள் அடைவதும் உண்டாகும்.
ஆனால் வடமேற்கு மூலையில் சமையல் அறை வைத்து அந்த சமையல் அறை கிழக்கு, மேற்கு முகமாக நீண்டிருப்பதும், அந்த சமையல் அறையில் போடப்படும் சமையல் செய்யப் பயன்படும் மேடையானது வடக்குச் சுவற்றிலும், கிழக்குச் சுவற்றிலும் பொருத்தப்பட்டிருக்குமாயின், வாஸ்துபடி மிகக் கடுமையான குறைகள் உண்டாகும்.
குறிப்பாக அந்த வீட்டில் பெண்கள் உடல் பலவீனமடைவதும், கணவன், மனைவி ஒற்றுமை குறைவதும் கடன், பொருளாளதார மேம்பாடற்ற நிலை மற்றும் குடும்ப வாரிசுகள் இஷ்டமின்றி வாழுவதும், வேகமற்ற விவேகமற்ற பிள்ளைகளாக மாறிப் போவதும் என அனேகச் சிக்கல்கள் உண்டாகும்.
இதுபோல கிழக்கு நோக்கி மற்றும் மேற்கு நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டிக்கொள்பவர்கள் அந்த வீட்டின் சமையல் அறையை தென்கிழக்கு மூலையில் தான் அமைக்கவேண்டும்.
கிழக்கு மேற்காக நீண்டவாக்கில் உள்ள இந்த அறையில் கபோடு மற்றும் பரண்கள் கிழக்குச் சுவற்றிலோ வடக்குச் சுவற்றிலோ அமைக்கக் கூடாது.
எப்போதும் சமையல் அறையும் மையல் அறையும், சிறப்பாக அமைந்து விட்ட வீடுகளில் மகிழ்ச்சிக்கு குறை ஏதுமிராது. இந்த வீடுகளில் தான் பிள்ளைகள் சிறப்பாக வருவார்கள். வசதி இருந்தும், சரியான உணவு செய்யாமை, வசதி இருந்தும் கணவன்,மனைவி மகிழாமை இதெல்லாம் இப்படி வாஸ்து தோஷங்களால் உண்டாகிறது.
சில வீடுகளுக்குச் சென்றாலே, சமையல் அறை அமைந்த விதம், படுக்கை அறை அமைந்த விதத்தாலேயே குடும்ப ஒற்றுமை குறைபாடு, பிள்ளைகள் ஒத்துப்போகாதது போன்ற பிரச்சினைகள் இருப்பது தெரியும்.
கணவன் துபாயில் வேலை, பிள்ளைகளில் ஒருவன் அமெரிக்காவில் மற்ற பிள்ளை ஆஸ்திரேலியாவில் மனைவி மட்டும் சென்னையில் இப்படி வாழும் அனேகர் உள்ளனர். இது நல்ல முன்னேற்றமல்லவா? எனக்கேட்கத் தோன்றும். ஆம் பணத்தால் முன்னேற்றம் தான். ஆனால் ஒருவரை ஒருவரைப் பார்த்துக் கொள்ளாமல் இந்த பணம் இருந்து பயனென்ன? இந்த மாதிரியான முன்னேற்றங்கள், வாலிப வயதில் மகிழ்ச்சி தரலாம். தவிர வயோதிகத்தில் இவர்களின் இந்த பெற்றோர்களின் நிலை என்ன?
எனவே சமையல் அறை சரியில்லாத போது பிள்ளைகள் வீட்டை விட்டு போவதும், மையல் அறை எனும், படுக்கை அறை சரியில்லாத போது, கணவன்-மனைவி பிரிவுகளும் ஆக பணம் சம்பாதித்தோம் அனுபவிக்க முடியவில்லை என அனேகக் சிக்கல்கள் உண்டாகும்.