

நெல்லை:
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. பலியான பக்தர்களின் ஆன்மா சாந்தியடைய நெல்லையப்பர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்ற உள்ளோம். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க உத்தரவிட வேண்டும். யாத்திரை பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.
இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சென்னையில் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்து மக்கள் கட்சியினர் தாக்கப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர நாராயணசுவாமி கோவிலில் வெள்ளி பல்லக்கு மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்று இந்து கோவில்களில் நடக்கும் திருட்டை தடுக்க திருக்கோவில் பாதுகாப்பு படையை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முறையாக ஊதியம், உபகரணங்கள் வழங்கி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
திருக்கோவில்களில் 8 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் முறைகேடுகள் நடக்கிறது. இந்து கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சீனா, இந்தியா எல்லையில் ராணுவத்தை குவித்து வருவது கண்டனத்துக்குரியது. எனவே சீன பொருட்களை புறக்கணித்து சீன கொடியை எரிக்கும் போராட்டம் நடத்துவோம்.
பெங்களூர் சிறையில் விதிமீறல் நடந்துள்ளது. இதுபோல தமிழகத்தில் உள்ள சிறைகளிலும் விதிமீறல்கள் நடக்கிறது. சிறையில் இருந்தவாறு கைதிகள் திட்டமிட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறைத்துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கருத்தில் கொண்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் குண்டு வெடிப்பு, கற்பழிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றம் செய்தவர்களை விடுவிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட தலைவர் உடையார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.