ஆன்லைனில் விசாரணை நடத்துங்கள்: அமலாக்கத்துறைக்கு அனில்தேஷ்முக் கோரிக்கை

வயதாகி விட்டதால் நேரில் வர முடியவில்லை, ஆன்லைனில் விசாரணை நடத்துங்கள் என அமலாக்கத்துறைக்கு முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கோரிக்கை வைத்து உள்ளார்.
அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக்
Published on

மும்பை :

மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த சனிக்கிழமை அனில் தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து அவரை நேற்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறியிருந்தது. அவர் நேற்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால் அனில் தேஷ்முக்  அமலாக்கத்துறைக்கு அவரது வக்கீல் மூலம் கடிதம் ஒன்றை கொடுத்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். இது எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு. எனக்கு 72 வயதாகிறது. பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். ரத்த அழுத்தம், இருதய பிரச்சினையும் உள்ளது.

ஏற்கனவே கடந்த 25-ந் தேதி பல மணி நேரம் நான் எனது வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக வாக்குமூலம் அளித்து இருக்கிறேன்.

அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை மற்றும் சில ஆவணங்களை நீங்கள் தரவேண்டும். அதில் உள்ள விவரங்கள் தெரிந்தபிறகு, நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும் தருகிறேன். இன்று அல்லது மற்ற எந்த நாளாக இருந்தாலும், எந்த நேரத்திலும் உங்களின் வசதிக்கு ஏற்ப ஆன்லைன் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன்.

இந்தநிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் வந்த அனில் தேஷ்முக் வக்கீல் கூறியதாவது:-

நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும் ஒத்துழைப்போம். சில ஆவணங்களை அவர்களிடம் கொடுத்து உள்ளோம். விசாரணைக்கு வர வேறு தேதி கேட்டு உள்ளோம். அமலாக்கத்துறையிடம் இருந்து போதுமான ஆவணங்கள் கிடைத்தவுடன் அனில் தேஷ்முக் விசாரணைக்கு அஜராவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com