

தேனி:
ஆண்டிப்பட்டி அருகே சிலுக்குவார்பட்டி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான குடிமகன்கள் வந்து மது வாங்கிச் செல்கின்றனர். மது குடித்து போதை தலைக்கேறியதும் பெண்களை கேலி செய்வதும், பாட்டில்களை ரோட்டில் உடைத்தும் ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே இந்த கடையை அகற்ற வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
ஆனால் சில நாட்களில் மீண்டும் அந்த கடை செயல்படத் தொடங்கியது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. இதில் சிறுவர்களும் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.