ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ஆந்திராவில் சுற்றுலா சென்ற படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Published on

குண்டூர்:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் புனித நீராட ஓங்கோலில் இருந்து நடைபயிற்சி கழகத்தைச் சேர்ந்த 38 பேர் வந்தனர்.

கார்த்திகை தின புனித நீராடலை முடித்த பிறகு அவர்கள் ஆந்திர மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெரிய படகில் ஏறி பவானி தீவுக்கு சென்றனர்.

அந்த தீவைச் சுற்றிப் பார்த்து விட்டு பிறகு அவர்கள் 38 பேரும் படகில் ஏறி பவித்ர சங்கமத்துக்கு சென்றனர். அப்போது ஆற்றின் நடுவே அந்த படகு திடீரென கவிழ்ந்தது.

இதில் 38 பேரும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினார்கள். அவர்களில் 15 பேர் மட்டமே உயிர் காக்கும் ஜாக்கெட் அணிந்திருந்தனர். என்றாலும் அவர்களும் தண்ணீர் வேகத்தில் மூழ்கினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 12 படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தப்படி கிடந்த 17 பேரை அவர்கள் காப்பாற்றினார்கள்.

மற்றவர்கள் உயிரிழந்து மிதந்தனர். நேற்றிரவு வரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை மேலும் 5 பேர் உடல் மீட்கப்பட்டது.

இதனால் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை வானம் இருட்டாகி மழை பெய்யும் சூழ்நிலை உருவானதும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் சுற்றுலா குழுவினர் வேறொரு படகில் ஏறி சென்றபோது விபத்தில் சிக்கி விட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com