

அகமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல் மந்திரி ஆனந்தி பென் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் முதல் மந்திரி ஆனந்தி பென் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஆனந்தி பென் படேல் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 31 வருடங்களாக நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். பா.ஜ.க.வின் கொள்கைகளின் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
எனவே அடுத்து வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்க வேண்டும். இதனால் அடுத்த தலைமுறைக்கான புதிய தலைவர்களை உருவாக்க முடியும். அரசியலுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எதிர்காலத்தில் பா.ஜ.க. எந்தப் பொறுப்புகளை அளித்தாலும் அதனைச் சிறப்புடன் செய்துமுடிப்பேன் என தெரிவித்துள்ளார்.