மானிய விலையில் பைக் வழங்கும் திட்டம் - திருவண்ணாமலையில் ஓட்டுனர் உரிமம் பெற குவிந்த பெண்கள்

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
மானிய விலையில் பைக் வழங்கும் திட்டம் - திருவண்ணாமலையில் ஓட்டுனர் உரிமம் பெற குவிந்த பெண்கள்
Published on

திருவண்ணாமலை:

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் பணியிடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 2,806 பேருக்கும், நகர்புறப்பகுதியில் 712 பேருக்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 518 பேருக்கு 2017-2018-ம் ஆண்டு பயனடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்டம் பிரிவில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 5-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள். இருசக்கர வாகனத்தை மானியத்தில் வாங்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமானது விண்ணப்பதாரர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.

அதனால், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் தற்போது ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் ஓட்டுனர் உரிமம் (எல்.எல்.ஆர்) பெறுவதற்காக நேற்று குவிந்தனர்.

ஓட்டுனர் உரிமத்திற்கு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்திலும், அதற்கான புகைப்படம் எடுக்கும் இடத்திலும் பெண்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று மட்டும் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 555 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து கழக ஆய்வாளர் ராம்குமார் கூறுகையில்:-

தமிழக அரசு பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்க உள்ளதாக அறிவித்ததில் இருந்து ஏராளமான பெண்கள் ஓட்டுனர் உரிமம் எடுக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 80 பேர் மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுத்து செல்வார்கள். மானியத்தில் இருசக்கர வாகனம் என்று அரசு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தினமும் சுமார் 500 பேர் வந்து ஓட்டுனர் உரிமம் எடுத்து செல்கின்றனர்’ என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com