தாம்பரம்-எருமையூரில் இருந்து அம்பத்தூர், முகப்பேருக்கு கல்குவாரி குடிநீர்

தாம்பரத்தை அடுத்த எருமையூரில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் அம்பத்தூர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.
தாம்பரம்-எருமையூரில் இருந்து அம்பத்தூர், முகப்பேருக்கு கல்குவாரி குடிநீர்
Published on

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய 4 ஏரிகளும் முற்றிலும் வறண்டு விட்டன.

இதன் காரணமாக சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்க குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.

இந்த கல்குவாரிகளில் நீர் இருப்பு குறைந்துவிட்டதால் இந்த மாதம் இறுதி வரை மட்டுமே தண்ணீர் பெற முடியும். இதனால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தாம்பரத்தை அடுத்த எருமையூரில் உள்ள 5 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கல்குவாரி குட்டைகளில் இருந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக 11 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது. தற்போது 7.5 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் சோதனை ஓட்டத்தை நடத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் 5 நாட்களுக்குள் முழுமையாக நிறைவு பெற உள்ளன. இதையடுத்து சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.

இந்த கல்குவாரி குட்டைகளில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு ஜூலை மாதம் வினியோகிக்கப்படும், இதற்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் அம்பத்தூர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com