

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று மாலையில் இறுதி போட்டி நடந்தது.
இதில் புதுடெல்லி ஓ.என்.ஜி.சி. அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரெயில்வே அணியும் விளையாடின. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் களத்தில் இறங்கியவுடன் ஆட்டத்தை காண்பதற்காக வந்திருந்த ரசிகர்கள் மிகுந்த கரகோஷம் எழுப்பினர். போட்டி தொடங்கிய முதலாவது நிமிடத்தில் புதுடெல்லி அணி வீரர் பிகாஷ் டோப்போ மின்னல் வேகத்தில் பந்தை கடத்தி சென்று ஒரு கோல் அடித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 9-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ககன் டீப் சிங் ஒரு கோல் அடித்து தனது அணியை சமன் செய்தார்.
தொடர்ந்து 55-வது நிமிடத்தில் புதுடெல்லி அணி வீரர் சுமித்குமார் ஒரு கோல் அடித்து தனது அணியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தார். மிகுந்த பரபரப்புடன் இந்த போட்டி நடந்து கொண்டு இருந்த நிலையில் 61-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் மணிகண்ட வெங்கடேஷ்வரன் ஒரு கோல் அடித்து தனது அணியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் இரண்டு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் இருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து வெற்றியை தீர்மானிப்பதற்காக ‘சூட் அவுட்‘ முறை கொண்டு வரப்பட்டது. இதில் செகந்திராபாத் அணி 4 கோல்களும், புதுடெல்லி அணி 3 கோல்களும் அடித்தன. இதனையடுத்து 6-5 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரெயில்வே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை புதுடெல்லி ஓ.என்.ஜி.சி. அணி பெற்றது.
முன்னதாக நடந்த 3-வது இடத்திற்கான போட்டியில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், பெங்களூரு ராணுவ லெவன் அணியும் விளையாடின. இதில் கபுர்தலா ஆர்.சி.எப். அணி வெற்றி பெற்று 3-வது இடத்தையும், பெங்களூரு ராணுவ லெவன் அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாசலம் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்றவருமான முஹமத் ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுளையும், சுழற்கோப்பையையும் வழங்கினார்கள்.