

ஒருபுறம் மழை இல்லாததால் கடும் வறட்சி. மற்றொருபுறம் தண்ணீர் பிரச்சினை. இதுபோன்ற அல்லல்களை சந்தித்துவரும் விவசாயிகளுக்கு அரசும் சோதனையாக உள்ளது. ஊருக்கே சோறு போடும் விவசாயிகளை எந்த அரசும் கைதூக்கவில்லை.
விளைநிலத்தையே நம்பி அரைவயிற்று கஞ்சியை குடிக்கும் விவசாயிகளுக்கு அடிமேல் அடிதான் விழுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கெயில் எரிவாயு குழாய் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என அழிவை நோக்கி செல்லும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இதற்கு ஏழை விவசாயிகள் போராட்டம் செய்தாலும் மத்திய, மாநில அரசுகள் அவர்களை வஞ்சிக்கிறது. தற்போது நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மையமும் அனுமதி வழங்கியிருப்பது தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி பகுதியில் இருந்து மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொட்டிபுரத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. கடின பாறைகள் கொண்ட இப்பகுதியில் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக மதுரை அருகே வடபழஞ்சியில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் நியூட்ரினோ ஆய்வு மைய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வந்த அதிகாரிகள் பொட்டிபுரத்தில் எளிதாக நியூட்ரினோ ஆய்வு மையத்தை நிறுவி விடலாம் என கங்கணம் கட்டினர்.
ஆனால் இதனை அறிந்த விவசாயிகள், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வெகுண்டெழுந்தனர். நியூட்ரினோ திட்டம் வந்தால் பெரியாறு அணை பாதிக்கக்கூடும். விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காது என ஆவேசமடைந்தனர்.
இத்திட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டம் செய்தனர். இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இத்திட்டம் உயிர் பெற்றுள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயம் அழிந்துவிடும். இங்குள்ள மக்கள் ஊரை காலிசெய்து விடுவார்கள் என வேளாண் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறியதாவது,
தேனி அருகே கேரள எல்லைப் பகுதியில் தேக்கடியில் முல்லை பெரியாறு அணை உள்ளது. மேற்கே அரபிக்கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை கிழக்கே திருப்பிவிட இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுக் முடிவு செய்தார். அதன்படி அவர் பெரியாறு அணையை கட்டினார். மொத்த உயரம் 156 அடி. இதில் 152 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டது. நாளடைவில் கேரள அரசின் சண்டித்தனத்தால் 142 அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 136 அடியானது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டதால் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. விவசாயத்தை வளமாக்க கூடிய முல்லைபெரியாறு அணை தண்ணீரை தற்போது நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு பயன்படுத்த உள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் அம்பரப்பர் மலையை சுற்றிலும் உள்ள 12 அணைக்கட்டுகள் பாதிக்கப்படும். அதாவது பொட்டிபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இடுக்கி அணை, 70 கி.மீ தூரத்தில் உள்ள பெரியாறு அணை, 45 கி.மீ தூரத்தில் உள்ள 12 அணைகள் கடுமையாக பாதிக்கும்.
ஆய்வுக்கூடத்திற்காக பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது அணைகளில் விரிசல் விழ வாய்ப்புள்ளது. இதனால் அணையில் தண்ணீர் தேக்குவது கேள்விக்குறியாகும். தண்ணீர் இல்லையென்றால் தேனி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் பாலைவனமாகும். எனவே அழிவை ஏற்படுத்தும் இந்த திட்டம் தேவையில்லை.
ரஞ்சித் (முல்லை பெரியாறு மீட்புக்குழு தலைவர்)
தமிழர்களின் உணர்வுகளை புரியாமல் மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருகிறது. அம்பரப்பர் மலையில் 2 கி.மீ தூரத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறையை 1000 டன் வெடிமருந்து கொண்டு வெடிக்க வைக்கப்பட உள்ளது. பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது வீடுகள் மற்றும் அணைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
எஸ்.ஆர். சக்கரவர்த்தி (எஸ்.ஆர். தமிழன் அறக்கட்டளை நிறுவனர்):- நியூட்ரினோ திட்டம் எதுக்கும் லாயக்கற்றது. இந்த மக்கள் விரோத திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நியூட்ரினோ வந்தால் நீர் ஆதாரம் பாதித்து தேனி பகுதி அழிந்து விடும். மக்கள் விரோத போக்கையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்த திட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசு அவர்களது குடும்பத்தை இங்கு குடிபெயர வைப்பார்களா? எனவே இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். ஆய்வு மையத்துக்கு எந்த எந்திரம் வந்தாலும் அதனை தடுப்போம்.