அக்னி நட்சத்திரம் தொடக்கம்: பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது

அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. நேற்று பெரம்பலூர்- அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது.
வெயில் கொளுத்துவதால் குடை பிடித்து செல்லும் பொதுமக்கள்.
வெயில் கொளுத்துவதால் குடை பிடித்து செல்லும் பொதுமக்கள்.
Published on

பெரம்பலூர்:

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அப்போதே இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரம்பலூர்- அரியலூரில் கடந்த பல நாட்களாகவே 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. கோடை மழையும் பெய்யாமல், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்களை ஏமாற்றியது. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போய் பரிதாபமாக காட்சியளிக்கின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிற அபாயம் உள்ளது.

இந்த ஆண்டு “அக்னி நட்சத்திரம்” வெயிலின்போது வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது.

கத்திரி வெயிலின் தொடக் கமே பயங்கரமாக இருந்தது. அந்த அளவிற்கு பெரம்பலூ ரில் காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை மேலும் கூடியது. தற்போது கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தோர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றதை காணமுடிந்தது. 

பெரம்பலூரில் நேற்று கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் வெயிலின் தாக்கத்தினால் பல இடங்களில் கானல் நீர் தெரிந்தது. வருகிற 28-ந்தேதி வரை உள்ள அக்னி வெயிலை எதிர்கொள்ள மக்கள், கோடை மழை பொழியுமா? என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com