

தஞ்சாவூர்:
தஞ்சை தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் பரசுராமன்.
இவரை செல்போன் மூலம் சிங்கப்பூர், கத்தார் நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய 2 பேர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி பரசுராமனை ஒருமையில் திட்டியதுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்களையும் திட்டினர். பிறகு அவர் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதேபோல் மன்னார்குடி பகுதியில் இருந்து பரசுராமனின் செல்போனில் பேசிய ஒருவர், ஒருமையில் திட்டியதுடன் முதல்-அமைச்சர், அமைச்சர்களையும் திட்டினார். வாட்ஸ்-அப்பிலும் இதே கருத்து பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலையத்தில் பரசுராமன் எம்.பி. புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தினார்.
அதில் சிங்கப்பூரில் வசித்து வரும் திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்த கலை, கத்தார் நாட்டில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், மன்னார்குடி கருவாக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார்(வயது32) ஆகியோர் தான் பரசுராமனிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.
அதன்பேரில் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி களங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவாரூர் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் விடுத்த கலை மற்றும் ஸ்ரீகாந்த் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews