

மதுரை:
புத்தாண்டு நாளை (1-ந் தேதி) பிறக்க உள்ளதை முன்னிட்டு, இன்று இரவு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பலர் ஈடுபடுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் பல பகுதிகளிலும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் புத்தாண்டு, சோகமாக அமைந்து விடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரை நகரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், பட்டாசு வெடிப்பது ஆகி நிகழ்வுகளில் சிலர் ஈடுபடுவார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுவது உண்டு.
அத்தகைய சூழ்நிலையில் உயிருக்கு போராடுவோரை காப்பாற்ற வேண்டி, அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் டாக்டர்களை பணியில் இருக்கச் செய்ய வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணியிடம் பேசியபோது தமிழக அரசின் உத்தரவுப்படி நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளை நரம்பியல், பொது அறுவை சிகிச்சை, எலும்பு ஆபரேசன், மயக்கவியல் மற்றும் பொது மருத்துவம் ஆகிய அறைகளில் வழக்கத்தை விட கூடுதலாக டாக்டர்கள் பணி செய்ய உள்ளனர்.
இதே போல் தலைக்காயம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ள டாக்டர்கள் இன்றும், நாளை (1-ந் தேதி)யும் பணியில் இருப்பார்கள் என்றார்.