

ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் சாலையில் நேற்று நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீதபற்பநல்லூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கடையம் அருகே உள்ள கட்டளையூரை சேர்ந்த கடற்கரை மகன் வெற்றிவேல் முருகன் (வயது23) என்பது தெரியவந்தது.
ஆலங்குளம் ராம்நகரில் ஒர்க்ஷாப் நடத்தி வரும் இவர் நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் இருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியாகி உள்ளார். விபத்துக்கு காரணமான வாகனம் எது என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews