பேரணாம்பட்டு அருகே பஸ் மோதி கணவன்-மனைவி பலி

பேரணாம்பட்டு அருகே தனியார் பஸ் பைக் மீது மோதியதில் கணவன், மனைவி பலியாகினர்.
பேரணாம்பட்டு அருகே பஸ் மோதி கணவன்-மனைவி பலி
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 45). இவரது மனைவி விமலா (35). தம்பதிக்கு ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் ஆம்பூர் அருகே உள்ள கோவிந்தாபுரம் தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இன்று காலை பிச்சைமுத்து, விமலா இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

மேல்பட்டி அருகே உள்ள நாக்தோப்பு என்ற இடத்தில் சென்ற போது ஆம்பூரில் இருந்து குடியாத்தம் சென்ற தனியார் பஸ் பைக் மீது மோதி அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைமுத்து, விமலா படுகாயமடைந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு பிச்சைமுத்துவின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதயைடுத்து பிச்சைமுத்து, விமலா இருவரும் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். வழியிலேயே விமலா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிச்சைமுத்து உடல்நிலை மோசமானதால் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சைமுத்து உயிரிழந்தார்.

இந்த நிலையில் பிச்சைமுத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மேல்பட்டி ஆம்பூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

விபத்தில் காயமடைந்த தம்பதியை மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றோம் அங்கு முதல் உதவி அளிக்காமல் குடியாத்தம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் வழியிலேயே விமலா இறந்துவிட்டார். இதற்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com