டெல்லி: அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு - ஆம் ஆத்மி அரசு மேல்முறையீடு

டெல்லி அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரத்தை வாபஸ் பெற்றதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டெல்லி: அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு - ஆம் ஆத்மி அரசு மேல்முறையீடு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 8,914 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி சார் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.எஸ்.எஸ்.எஸ்.பி.) விளம்பரம் வெளியிட்டது. ஆனால், அதை திரும்ப பெறுவதாக ஆகஸ்ட் 24-ம் தேதி மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சோஷியல் ஜூரிஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அரசு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விளம்பரத்தை டிஎஸ்எஸ்எஸ்பி திரும்ப பெற்றது சட்ட விரோதமானது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் நியமன நடைமுறையை திரும்ப பெறும் வகையில் டிஎஸ்எஸ்எஸ்பி வெளியிட்ட அறிவிக்கைக்கு கடந்த டிசம்பர் 11-ம் தேதி தடை விதித்தார். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் வகையில் வரும் 20-ம் தேதி(இன்று)க்குள் புதிய விளம்பரம் வெளியிடவும் நீதிபதி ஏ.கே. சாவல்லா உத்தரவிட்டார். இதை எதிர்த்து டெல்லி துணைமுதல்வர் மற்றும் கல்வித்துறை மந்திரியான மணிஷ் சிசோடியா மேல்முறையீடு செய்தார்.   

இது நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் சிறந்த முறையில் நியமிக்கப்பட வேண்டும். பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும். அனுபவம் நிறைந்த, தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வழக்கு விசாரணை இன்று தொடரும் ( 20ம் தேதி)  என கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com