

மேட்டுப்பாளையம்:
2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரிஆ.ராசா நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை நால் ரோட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது . வரவேற்பை பெற்றுக் கொண்டு ஆ. ராசா பேசியதாவது-
ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொலை தொடர்பு அமைச்சராக பொறுப்பு வகித்த போது மேட்டுப்பாளையத்தில் ஒரு அலுவலகமும் உதகையில் ஒரு அலுவலகமும் அமைத்து மக்கள் பணியாற்றி வந்தேன். இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என்னை குற்றவாளியாக்கி தி.மு.க.வை அழித்து விடலாம். தலைவர் கலைஞருக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். எனது பதவியை பறித்து விடலாம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று நினைத்தார்கள்.
நான் ஒரு கிராமத்தில் பிறந்தவன். கிராம பள்ளியில் படித்தவன். 1989 -ம் ஆண்டு எனது வீட்டில் ஒரு டெலிபோன் வசதி கூட கிடையாது. அது எனக்கு கனவாகவே இருந்தது. 2007 -ம் ஆண்டுக்கு பிறகு நான் தொலை தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்ற போது கிராம புறங்களில் 8 சதவீதம் தொலைபேசி வசதியும் நகர புறங்களில் 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை தொலைபேசி வசதியும் இருந்தது. நான் எடுத்த முயற்சியின் காரணமாக தொலைபேசி வசதி ஆயிரம் கோடியை தாண்டியது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற போது தொலைபேசி கட்டணம் ரூ.1.25 பைசாவாக இருந்தது. நான் பெரும் முயற்சி எடுத்து தொலைபேசி கட்டணத்தை 30 பைசாவாக குறைத்தேன். ஒரு புரட்சியாளரை குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது இயல்புதானே. சாதித்த யாருக்கும் 2 ஜி என்ன என்று புரியவில்லை. ஒரு ஊமை நாடகம் போல் முடித்து விட்டார்கள் .
கிராமத்தில் ஒரு பழங்கதை உண்டு. கண்பார்வையற்ற 4 பேரிடம் யானையை பார்த்து உள்ளீர்களா? என்று கேட்டதற்கு ஒருவர் யானையின் வாலை தொட்டுப் பார்த்து கயிறு என்றும் கால்களை தொட்டு பார்த்த ஒருவர் தூண் என்றும் காதை தொட்டுப் பார்த்த ஒருவர் முறம் என்றும் உடலை தொட்டு பார்த்த ஒருவர் சுவர் என்றும் கூறியதை போல் விசாரித்த அனைவரும் கூறிவிட்டனர். தலைவர் கலைஞர் தாயாக இருந்து என்னை 15 மாதம் பார்த்து கொண்டார். தி.மு.க.செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறைச்சாலைக்கு வந்து எனக்கு ஆறுதல் கூறினார். நீலகிரி தொகுதி மக்களும் என் மீது மாறாத நம்பிக்கை வைத்து என்னை வந்து பார்த்து ஆறுதல் கூறினீர்கள். இதுவே எனக்கு வீரத்தையும் விவேகத்தையும் மன தைரியத்தையும் மன உறுதியையும் தேடி தந்தது. 7 வருடம் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். நானே வாதாடினேன்.
மன்மோகன்சிங் ஆட்சி நல்ல ஆட்சி. பெரிய ஊழல். இமாலய ஊழல் என்று கூறினார்கள். இதனால் எனக்கு தீராத மன உளைச்சல் ஏற்பட்டது . இன்று நீதி வென்றது. இந்த வெற்றியை கலைஞரின் காலடியில் காணிக்கையாக்குகிறேன் என்றும் உங்களோடுதான் நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார் .