கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலையில் 9 பேர் கும்பல் கைது

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலை வழக்கில் 9 பேர் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலையில் 9 பேர் கும்பல் கைது
Published on

கேரளாவில் சமீப காலமாக அரசியல் கட்சிகள் இடையே மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் ஒரு கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ராஜேஷ் கொலை மற்றும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன், டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா ஆகியோரை நேரில் வரவழைத்து கவர்னர் சதாசிவம் கேட்டறிந்தார்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கவும் அவர் கூறினார். மேலும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கும் இதுபற்றி பினராயி விஜயனிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவின் நேரடி விசாரணையில் தனிப்படை போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிக்குட்டன், விஜித், விதின் ஆகியோர் உள்பட 9 பேர் கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் காட்டாக்கடை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்தனர். அந்த பகுதி மக்கள் இதை பார்த்து சந்தேகம் அடைந்து போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் படை அங்கு சென்று சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தது.

அந்த கும்பலிடம் இருந்து அரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டது. இந்த கும்பலை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் நேற்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ராஜேஷ் உடல் ஊர்வலமாக ஸ்ரீகாரியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பாரதிய ஜனதா மாநில செயலாளர் கும்மனம் ராஜசேகரன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ஆனாலும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஊர்வலத்தில் சென்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை அவர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். இதனால் பதட்டம் ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஸ்ரீகாரியம் சென்று அடைந்ததும் ராஜேஷ் உடலுக்கு உறவினர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ராஜேசுக்கு அபிஷேக், ஆல்டின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்தனர். அவர்களின் குழந்தைகளுடன் ராஜேசின் குழந்தைகளும் ஓடி, ஆடி விளையாடிக் கொண்டு இருந்தது. தந்தை இறந்தது பற்றி அறியாமல் இந்த குழந்தைகள் விளையாடியதை பார்த்து உறவினர்கள் கண்கலங்கினார்கள். ராஜேசின் உடல் வீட்டிற்கு வந்த பிறகே அவரது குழந்தைகளால் தந்தையை இழந்த சோகத்தை உணரமுடிந்தது.

திருவனந்தபுரத்தில் பதட்டம் நீடிப்பதாலும் மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாலும் அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வருகிற புதன் கிழமை வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் கொலையை தொடர்ந்து கேரளாவில் பதட்டம் நீடித்து வருகிறது. மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பினராயி விஜயனை கவர்னர் சதாசிவம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர் இன்று ஆர்.எஸ்.எஸ். - பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை அழைத்து பேச திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com