

திருச்சி:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதாக வியாபாரிகளான தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் பள்ளி மாணவனை தாய் கண்முன்னே போலீசார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம், திருச்சியில் சைக்கிளில் வந்த முதியவரை போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சி போன்றவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பொதுமக்களிடம் அத்துமீறும் வகையில் அநாகரிகமாகவும், கோபமாகவும் நடந்துகொண்ட போலீசாரின் பெயர் பட்டியலை எடுக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 80 பேர் கொண்ட பட்டியல் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்கள் பணியில் இருந்து மாற்றப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாதகால உளவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 80 போலீசார் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கு தனியாக உளவியல் ரீதியாக பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி பொதுமக்களிடம் பழகுவதற்கான பாங்கை மேம்படுத்தும் வகையில் இருக்கும். இந்த பட்டியலில் உள்ள 80 போலீசாரும் ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையிலும், தனிப்பிரிவு போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், களத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகளின் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாத கால உளவியல் பயிற்சிக்கு பிறகு, இவர்கள் அனைவரும் மீண்டும் பொதுமக்களுடன் தொடர்புடைய பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கொரோனா காலகட்டத்தில் மட்டும் அல்லாமல், மற்ற நேரங்களிலும் சட்டங்களை மதித்து நடப்பது எல்லோருக்கும் தேவையானது. பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், காவலர்களும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.