

திருவண்ணாமலை:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வந்து தரிசனம் செய்கின்றனர்.
கிரிவலப்பாதையில் பல தீர்த்தகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டுள்ளனர்.
கிரிவலப்பாதையில் மேலும் பல தீர்த்த குளங்கள் உள்ளன. அவற்றில் பல தீர்த்த குளங்கள் தூர்வாரப்படாததால் மண் சரிந்து மூடியுள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் இளைஞர்கள் குழு அமைத்து 8 குளங்களை தூர்வாரி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் நீர் துளிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பது, சீரமைப்பதை நோக்கமாக கொண்டு செயல்பாடுகளில் இறங்கினர். முதற்கட்டமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 1½ ஆண்டுகளில் பூமந்தாள் தீர்த்த குளம், சரஸ்வதி தீர்த்தம், பச்சையம்மன் தீர்த்தம், பிள்ளையார் தீர்த்தம், சோமவார தீர்த்த குளம், நந்தி தீர்த்தம், தர்மராஜா தீர்த்தகுளம், வேடியப்பன் குளம், ஆகியவற்றை தூர்வாரி வெற்றிகரமாக பயன்பாட்டு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து நீர் துளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன் கூறியதாவது:-
திருவண்ணாமலையை சுற்றிலும் 365 குளங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குளத்தில் இருந்து நீர் எடுத்து சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் ஒரு காலத்தில் நடந்துள்ளது காலப்போக்கில் இது கைவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றியிருந்த பல குளங்கள் காணாமல் போய் விட்டன.
தற்போது சுமார் 120 குளங்கள் மட்டுமே உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள தீர்த்த குளங்கள் பல மகிமைகள் கொண்டது. இதில் மூழ்கி வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால் முதற்கட்டமாக தீர்த்த குளங்களை தூர் வாரும் பணியில் இறங்கினோம்.
இதற்காக நண்பர்கள் வட்டாரத்தில் நிதி திரட்டினோம். மொண்டிக்குளம், பச்சையம்மன் குளம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தோம். இதற்கு ரூ.2 லட்சம் வரை செலவானது.
தற்போது தர்மராஜா தீர்த்த குளத்தை தூர்வாரி வருகிறோம். எங்கள் பணிக்கு பொது மக்களிடம் வரவேற்பு அமோகமாக உள்ளது. நாங்கள் பணியில் ஈடுபடும் நாட்களில் பொதுமக்களே உணவு சமைத்து தருகிறார்கள்.
தூர்வாரப்பட்ட தீர்த்த குளங்களை பக்தர்கள் நீராடி செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.