வங்க கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.
குமரி மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை வரும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டனர். சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் ஒக்கி புயலின் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர்.
கடலில் சுழன்றடித்த காற்றில் சிக்கி, மீனவர்களின் விசைப்படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன. லட்சத்தீவு அருகே உள்ள ஆளில்லாத பல தீவுகளில் குமரி மீனவர்களின் விசைப் படகுகள் தஞ்சம் அடைந்தது. ஒக்கி புயலில் சிக்கி கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றும் பணியில் இந்திய கடலோரப்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி ஒக்கி புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த தமிழகத்தை சேர்ந்த 71 பேர் உட்பட 357 மீனவர்கள் மீட்கப்பட்டதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.