திருப்பூர் மார்க்கெட்டில் 65 டன் மீன் விற்பனை

திருப்பூர் மீன் மார்க்கெட்டில் 65 டன் மீன் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மீன் மார்க்கெட்
திருப்பூர் மீன் மார்க்கெட்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் கடலோரப்பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இங்கு வார நாட்களில் தினசரி சாதாரணமாக 40 டன் மீன்களும், சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் 60 டன் மீன்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமாக காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் நேரத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் மாற்றி அமைத்தனர்.

அதன்படி இரவு 7 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை மொத்த வியாபாரமும், அதன்பிறகு காலை 10 மணிவரை பொதுமக்களுக்கான சில்லரை வியாபாரமும் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் பொதுமக்கள் மீன் வாங்க அதிக அளவில் குவிந்தனர். இதனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மேலும் பலர் முககவசம் அணியாமலே மீன் வாங்க வந்திருந்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மொத்த வியாபாரம் மட்டும் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் யாருக்கும் சில்லரையில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து நேற்று மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

திருப்பூர் மீன் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இருந்து 25 டன், ஆந்திராவில் இருந்து 40 டன் என்று மொத்தம் 65 டன் மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மீன் விற்பனை நேற்றுமுன்தினம் இரவு 7 மணிமுதல் நேற்றுகாலை 6 மணிவரை நடைபெற்றது. ஒருகிலோ மத்தி மீன் ரூ.140-க்கும், வஞ்சிரம் ரூ.600-க்கும், பாறை ரூ.450-க்கும், காளான் ரூ.700-க்கும், ஊழி ரூ.500-க்கும், நகரை ரூ400-க்கும், ஏட்டை ரூ.280-க்கும், நண்டு ரூ.300-க்கும், விலா ரூ.400-க்கும் விற்பனை ஏற்பட்டது.

அதேபோல ஆந்திரா வளர்ப்பு மீன்களான கட்லா ஒரு கிலோ ரூ.180-க்கும் ரோகு ரூ.150-க்கும்,மிருகால் ரூ.140-க்கும் அணைப்பாறை ரூ.130-க்கும் நெய்மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும் போது ஆட்டுக்கறி, கோழிக்கறி விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் மீன் வாங்க தொடங்கி விட்டனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச்சென்றனர். வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது. விற்பனைக்கு வந்திருந்த 65 டன் மீன்களும் விற்று தீர்ந்து விட்டது என்றனர்.

திருப்பூரில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.800-க்கும், கோழிக்கறி ரூ.240-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறும்போது வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது. ஒரு ஆட்டை அறுத்து கறியாக்கி வைத்துக்கொண்டு அதை விற்று முடிக்க மாலை வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com