

மேட்டூர்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிக பட்சமாக 2 அணைகளில் இருந்தும் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதே போல கபினி அணைக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளது. 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உள்ளது. 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வேகமாக அந்த அணைகள் நிரம்பி வருகிறது. கபினி அணைக்கு இன்று 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரும, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 61 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி நுங்கும், நுரையுமாக தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. பிலி குண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக அணைகளில் கூடுதலாக திறக்கப்பட்ட 61 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு நாளை மறுநாள் வந்து சேரும். அப்படி வரும் பட்சத்தில் தமிழக காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படியும், அறிவுறுத்தப்பட உள்ளது. மேலும் காவிரியில் நீர்வரத்தை தமிழக அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 16 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்து 5 ஆயிரத்து 97 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 53.47 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 53.98 அடியாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.