திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி முன்பு மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. (உள்படம்:பிரியதர்ஷினி)
தனியார் பள்ளி முன்பு மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. (உள்படம்:பிரியதர்ஷினி)
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கெஜல் நாயக்கன்பட்டியில் தனியார் மெட்ரிகுலே‌ஷன் பள்ளி உள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த பச்சையப்பன் என்பவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது6) 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

பச்சையப்பன் கும்பகோணத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இதனால் பிரியதர்ஷினி புளியம்பட்டியில் உள்ள அவருடைய தாத்தா கோவிந்தராஜ் வீட்டில் தங்கியிருந்தார்.

தினமும் புளியம்பட்டி கிராமத்தில் இருந்து வேன் மூலம் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த பிரியதர்ஷினி மாலை 3 மணியளவில் பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறி ஆசிரியர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது தாத்தா கோவிந்தராஜ் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது பேத்தி பிரியதர்ஷினி சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கந்திலி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கெஜல் நாயக்கன்பட்டி தனியார் பள்ளி முன்பு திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியில் ஆசிரியை அடித்ததால் தான் மாணவி இறந்துள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருப்பினும் 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com