

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயியை சேர்ந்தவர் ஜோளி.
ஜோளியின் குடும்பத்தில் 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். ஜோளியின் கணவர் ராய் தாமஸ், மாமனார், மாமியார் என அடுத்தடுத்து நடந்த மரணங்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் குடும்பத்தினரை ஜோளி சயனைடு கொடுத்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஜோளியை கைது செய்தனர். அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த நகை கடை ஊழியர் பிரஜிகுமார், மேத்யூ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஜோளி, பிரஜி குமார், மேத்யூ ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டுக்கும் அழைத்துச் சென்று சாட்சியங்களை சேகரித்தனர்.
ஜோளியின் மாமனார், மாமியார் மற்றும் கணவர் கொல்லப்பட்ட வீட்டிற்கு ஜோளி நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜோளி மறைத்து வைத்திருந்த சயனைடு பாட்டில் கைப்பற்றப்பட்டது.
வீட்டில் நடந்த கொலைகள் குறித்து மற்ற உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் சாட்சியங்கள் சேகரித்தனர். ஜோளியை போலீசார் அழைத்து வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் வீடு முன்பு திரண்டனர்.
அவர்கள் ஜோளியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏராளமானோர் திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களை அங்கிருந்து கலைந்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
பொதுமக்களின் எதிர்ப்பால் ஜோளி முகத்தை மூடியபடியே வீட்டை விட்டு வெளியே வந்தார். அவர் உடன் இருந்த போலீசாரிடம் நானும் சயனைடு தின்று தற்கொலை செய்ய விரும்பினேன் என்று கூறினார்.
ஜோளி தற்கொலை செய்ய விரும்பியதாக, கூறியதை தொடர்ந்து அவரை காவலில் வைத்துள்ள அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 24 மணி நேரமும் பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.