

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு சிக்கல் இன்றி மருத்துவ விசா வழங்கும் விஷயத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வகையில் இப்போது 9 வயது சிறுமி உள்ளிட்ட 3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 9 வயது சிறுமி மரியா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் சிகிச்சை பெறுதவற்காக விசா வழங்க உதவி செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தந்தை தனிஷ் மேமன் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்தார். அவருக்கு டுவிட்டரில் பதில் அனுப்பிய சுஷ்மா, ‘மரியா தனிஷ், உங்களுக்கு உடனடியாக விசா வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் கூறியுள்ளேன்’ என கூறியுள்ளார்.
இதேபோல், மரியம் ஆசிம் என்பவர் தனது தந்தையின் சிகிச்சைக்காக விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். அவருக்கும் இந்தியா விசா வழங்கும் என சுஷ்மா கூறியுள்ளார். மேலும், பரிஹா உஸ்மான் என்ற பெண்ணுக்கும் மருத்துவ விசா வழங்க உறுதி அளித்துள்ளார் சுஷ்மா.