

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14-ந்தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குப்வாரா மாவட்டத்தில் பாபாகுண்ட் எனும் கிராமத்துக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்களுடன் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் ராணுவத்தின் 22 ஆர்.ஆர். பிரிவு படை வீரர்கள் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் சென்று இருந்தனர். அவர்கள் அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
நேற்று மாலைக்கு பிறகும் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாததால் அந்த கிராமத்தைச் சுற்றி ராட்சத மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. பயங்கரவாதிகள் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கு ஒளியை பாதுகாப்பு படை வீரர்கள் அரண் அமைத்து இருந்தனர்.
இன்று அதிகாலை 2 பயங்கரவாதிகளும் அந்த வீட்டுக்குள் இருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். அவர்கள் பதுங்கி இருந்த வீட்டுக்குள் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.