

பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 47). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேகா (40). இவர்களுக்கு ஜெகதீஷ்வரன் (10), விஷ்வா (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று இரவு ரேகா வீட்டில் தனது மகன்களுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை (கான்கிரீட்) இடிந்து 3 பேர் மீதும் விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெகதீஸ்வரன், விஷ்வா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மகன்கள் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ரேகா தலையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி சிறுவர்களின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த எமனேஸ்வரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடிந்து விழுந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது. மராமத்து செய்யாமல் இருந்தால் வீட்டின் மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர்கள் பலகீனமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.