

மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்காளாம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40), விவசாயி. இவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக பலமுறை அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஆனால் பட்டா கிடைக்கவில்லை.
இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அங்கு மணிகண்டன் வந்தார். அவர் கையில் ஒரு பாட்டில் வைத்திருந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற மணிகண்டன் பாட்டிலில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதனை கண்டு அங்கு நின்றவர்கள் பதற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் மணிகண்டன் தனது உடலில் தீ வைக்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி விட்டனர்.
பின்னர் மணிகண்டன் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை சின்னக்கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (43). இவர் கண்மாய் மற்றும் ஊரணிகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்பு குறித்தும் அதனை அகற்ற வேண்டியும் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 6 மாதமாக மனு கொடுத்து வந்தார்.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனவேதனை அடைந்த ரவிச்சந்திரன் இன்று காலை கலெக்டர் அலுவலக வளாக்தில் தீக்குளிக்க முயன்றார்.
பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை அவர் உடலில் ஊற்றியபோது போலீசார் தடுத்து விட்டனர். தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.