ஐதராபாத்தில் ஒரே நாளில் 2 லட்சம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து

ஐதராபாத்தில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு மீன் மருந்து வழங்கப்பட்டது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெல்லத்தில் வைத்து ஆஸ்துமா மருந்து வழங்கப்பட்டது.
ஐதராபாத்தில் ஒரே நாளில் 2 லட்சம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து
Published on

நகரி:

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைக்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியை பதினி சகோதரர்கள், குடும்பத்தினர் பரம்பரையாக செய்து வருகிறார்கள். மீன் மருந்தை சாப்பிடுவதால் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று நம்புவதால் மிகவும் பிரசித்தி பெற்றது. நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான மீன் மருந்து முகாம் ஐதராபாத் கண்காட்சி மையத்தில் தொடங்கியது.

மீன் மருந்து வாங்குவதற்காக 32 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.

மீன் மருந்து சாப்பிடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஐதராபாத் கண்காட்சி மையத்தில் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்த முகாமில் பங்கேற்றனர். மூலிகை மருந்தில் மீனை தொட்டு நோயாளியின் வாயில் திணிக்கிறார்கள். ஒருவர் மீனை நோயாளியின் வாயில் கொடுக்க மற்றொருவர் அதை நோயாளி விழுங்க உதவி செய்கிறார்.

நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு மீன் மருந்து வழங்கப்பட்டது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெல்லத்தில் வைத்து ஆஸ்துமா மருந்து வழங்கப்பட்டது.

இன்று காலை 2-வது நாளாக மீன் மருத்துவ முகாம் தொடங்கியது. இன்று மாலை வரை முகாம் நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் அனைவருக்குமே மீன் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இன்றும் லட்சக்கணக்கானோருக்கு மீன் மருந்து வழங்கப்பட்டது.

தெலுங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, மராட்டியம், ஒடிசா மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமா நோயாளிகள் மீன் மருந்து முகாமுக்கு வந்து பயன் அடைந்தனர். ஒரு முறை மீன் மருந்து சாப்பிட்டாலே ஆஸ்துமா குணமாகிவிடும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மீன் மருத்துவ முகாமுக்காக லட்சக்கணக்கான மீன்களை தெலுங்கானா அரசின் மீன் வளத்துறை இலவசமாக வழங்கியது. அதே போல் அரசு துறைகள் சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, பஸ் வசதி போன்றவையும் செய்யப்பட்டிருந்தது.

இந்த மருத்துவ முகாமை நடத்தும் பதினி சகோதரர்கள் கூறியதாவது:-

ஆண்டாண்டு காலமாக மீன் மருத்துவ சிகிச்சையை சேவை மனப்பான்மையுடன் இலவசமாக அளித்து வருகிறோம். எங்கள் பரம்பரையை சேர்ந்த முன்னோர்கள் நிஜாம் காலத்தில் இருந்தே இந்த மீன் மருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த சேவை இப்போதுவரை தொடருகிறது.

மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தீரும். ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப நோய் வராது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com