மெரினா லூப் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் விற்பனை அங்காடி- கமிஷனர் தகவல்

மெரினா லூப் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் விற்பனை அங்காடி அமைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
மீன்
மீன்
Published on

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையை உலக தரத்துக்கு மேம்படுத்த பல்வேறு திட்டங்களை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிய நடைபாதைகள் அமைப்பது, சுகாதாரமான உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மெரினா கடற்கரை லூப் சாலையில் நேற்று காலை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இருவரும் மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள பகுதிகளை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், பி.என்.ஸ்ரீதர் மற்றும் சென்னை போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில், 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், சாலை ஓரங்களில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்தி விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை அருகே 2 ஏக்கர் பரப்பில் மீன் விற்பனை அங்காடி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் போதுமான இடைவெளியுடன், சுகாதாரமான வகையிலும் 300 மீன் கடைகள் கட்டப்பட உள்ளன.

இந்த அங்காடியின் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 400 இருசக்கர வாகனங்கள், 80 4 சக்கர வாகனங்கள் ஆகியவை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 அல்லது 4 மாத காலத்துக்குள் முடிவடைந்து, இந்த மீன் அங்காடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். அதன்பின்னர் சாலை ஒரங்களில் உள்ள வியாபாரிகள் அனைவரும் இந்த அங்காடியில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மெரினா கடற்கரை சுகாதாரமாக இருக்க வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்துக்கு மீனவர் சங்கங்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டை தவிர்த்து சென்னையில் 85 சிறு, குறு மார்க்கெட்கள் உள்ளன. மயிலாப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு தேவையான விற்பனை அங்காடி அமைப்பது குறித்து விரிவான ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அநேக இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com