சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்: பட்டினபாக்கம் கடலில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பட்டினபாக்கம் கடலில் கரைக்கப்படுகின்றன.
சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்: பட்டினபாக்கம் கடலில் கரைப்பு
Published on

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் இந்து முன்னணி சிவசேனா, அகில இந்திய சத்திய சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டன.

சிலைகளுக்கு போலீசார் முழு நேர பாதுகாப்பு அளித்தனர். தினமும் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கடந்த 27-ந் தேதி முதல் கட்டமாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிவசேனா, கந்தர் சேனை மற்றும் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்பட்ட 881 விநாயகர் சிலைகளும், நேற்று தமிழ்நாடு சிவசேனா, பாரத் முன்னணி, இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி ஆகிய அமைப்புகளால் வைக்கப்பட்ட 90 சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் கடலில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. மதியம் 1.21 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்ட அருகே இருந்தும், மதியம் 2.01 மணிக்கு அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள முத்துசாமி பாலம் சந்திப்பில் இருந்தும் ஊர்வலம் தொடங்குகிறது.

இந்த சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்படுகின்றன. இதே போல் வடசென்னை பகுதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் விநாயகர் சிலைகள் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதி கடலில் கரைக்கப்படுகின்றன.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் மாலை பட்டினபாக்கத்தில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்து முன்னணி தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

வாகனங்களில் விநாயகர் சிலைகள் எடுத்து செல்லும் போது விநாயகர் துதி பாடல்களை பாடியபடி செல்கிறார்கள்.

ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் ஒரு போலீஸ் காரர் பாதுகாப்புக்கு செல்கிறார். ஊர்வல பாதையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com