

திருவாரூர்:
தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவு 24.3.20 மாலை 6 மணி முதல் திருவாரூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் 1200 காவல் அலுவலர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக தொடர் பணியில் இருந்து பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் வாகன தணிக்கை, ரோந்து பணி ஆகியவற்றையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் இருந்தவர்கள் மீது 20 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் முக்கியத்துவம் உணராமல் பொதுமக்களில் பலர் நகர பகுதிகளில் இருச்சக்கர வாகனங்களில் பல்வேறு காரணங்கள் கூறி நேற்று (25.3.20) சுற்றி திரிந்த நிலையில் அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தணிக்கை செய்து காரணம் கருதி எச்சரிக்கை செய்தும், தேவையில்லாமல் சுற்றிதிரிந்த சுமார் 150 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறும் விதமாகவோ, அதனை அவமதிப்பு செய்யும் விதமாகவோ செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை எச்சரிக்கை செய்துள்ளார்கள்.