மேலூரில் 15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

மேலூரில் 15 வயது சிறுவனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மேலூர்:

மேலூர் ஜோதிநகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் தவணை முறையில் பணம் கொடுத்து கடைகளில் வசூல் செய்து வருகின்றார். இந்த நிலையில் சின்னதுரை நேற்று வெளியூர் சென்ற நிலையில் அவரது மகன் கிஷோர்(வயது 15) பணம் வசூல் செய்து வந்தான். அவன் சந்தைபேட்டை பகுதியில் பணம் வசூலித்த போது, திடீரென அங்கு வந்த வாலிபர் கத்தியால் கிஷோரை கைகளில் குத்தினான்.

பின்னர் அந்த கத்தியை சந்தைபேட்டையிலுள்ள பிரதான சாலையின் நடுவே தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓட முயன்றான். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவனை பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே ரத்தகாயங்களுடன் அலறிய சிறுவன் கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிடிபட்ட வாலிபர் மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்த சிவா(21) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கிஷோரிடம் உள்ள பணத்தை பறிப்பதற்காக கத்தியால் குத்தினானா அல்லது முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மேலூரில் சிறுவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com