கற்பழிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு சிசேரியன் பிரசவம் - ஆண் குழந்தைக்கு தாயானாள்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உறவினரால் கற்பழிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது. பள்ளிக்கு செல்லும் வயதில் அந்தப் பெண் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள்.
கற்பழிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு சிசேரியன் பிரசவம் - ஆண் குழந்தைக்கு தாயானாள்
Published on

இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம், கார்கோனே மாவட்டம் பருட் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான வயிற்று வலியால் துடித்ததை கண்ட பெற்றோர் அவளை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றில் 20 வார கரு வளர்வதாக கூறிய தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக, பெற்றோர் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் தங்களது உறவினரான 21 வயது வாலிபர் தன்னை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக தெரிவித்தாள். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிகோரி கார்கோனே மாவட்ட நீதிமன்றத்தில் அவளது பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். மருத்துவ காரணங்களை முன்வைத்து இதற்கு அனுமதி அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து மத்தியப்பிரதேசம் மாநில ஐகோர்ட் இந்தூர் கிளையில் பெற்றோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சிறுமிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவளது வயிற்றில் வளரும் கருவை கலைப்பது ஆபத்தில் முடியும் என மருத்துவர் குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த சிறுமிக்கு உரிய மருத்துவ கண்காணிப்பில் வைக்குமாறு கார்கோனே மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், கார்கோனே மாவட்ட அரசு மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்தது. பள்ளிக்கு செல்லும் வயதில் அந்தப் பெண், 2.6 கிலோ எடையுள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தையை பராமரித்து, வளர்க்க அவளது பெற்றோர் விருப்பம் தெரித்துள்ளதாக அவளது வக்கீல் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை ஏதாவது ஒரு காப்பகத்தில் வளர்வது நல்லது என கருத்து தெரிவித்துள்ள அவர், சட்ட நடைமுறையின்படி, பிறந்த குழந்தையின் மரபணுவை கைதான அதன் தந்தையின் மரபணுவுடன் பொருத்தி பரிசோதிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com