திருச்சியில் டிரைவர் இல்லாமல் 10 கி.மீ. தூரம் ஓடிய ரெயில் என்ஜின்

திருச்சியில் டிரைவர் இல்லாமல் 10 கி.மீ. தூரம் ஓடிய ரெயில் என்ஜின்

திருச்சியில் இன்று டிரைவர் இல்லாமல் சுமார் 10 கி.மீ. தூரம் வரை ஓடிய ரெயில் என்ஜினால் பெரும் பரபரப்பு உருவானது. எதிரே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Published on

திருச்சி:

திருச்சி ரெயில்வே ஜங்‌ஷனில் 1ஏ பிளாட்பாரத்தில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு பழுதான ரெயில் என்ஜினை ஈரோட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற் காக இயங்கும் நிலையில் இருந்த என்ஜினோடு இணைத்து எடுத்து செல்ல டிரைவர் (லோகோ பைலட்) தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பழுதான ரெயில் என்ஜின் திடீரென இயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) என்ஜினை நிறுத்த முயன்றார். ஆனால் என்ஜின் நிற்கவில்லை.

செய்வதறியாது திகைத்த அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டிரைவர் இல்லாமல் ரெயில் என்ஜின் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஜினை கோட்டை ரெயில் நிலையத்தில் சிக்னல் மூலம் ரெயிலை நிறுத்த முயன்றனர். ஆனாலும் ரெயில் என்ஜின் நிற்காமல் ஓடியது.

கரூர் பை-பாஸ் பாலம் கடந்து கம்பரசம்பேட்டை வழியாக முத்தரசநல்லூர் சென்றதும் ரெயில் என்ஜினை லூப் லைன் கொண்டு சென்று நிறுத்தினர்.

என்ஜின் பிரேக் இல்லாமல் ஓடியபோது எதிரே ரெயில்கள் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு விதமாக கூறப்பட்டது. முதலில் 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு பயணிகள் ரெயில் பிரேக் இல்லாமல் கோட்டை ரெயில் நிலையத்தில் சிக்னல் போட்டும் நிற்காமல் சென்றதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் அதிகாரிகளுக்கு தெரிவித்து முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மற்றொரு தகவலில் பழுதான என்ஜினை நல்ல என்ஜினில் பொருத்தி கொண்டு செல்ல முயன்ற போது என்ஜின் டிரைவர் கீழே இறங்கி பழுதான என்ஜினில் வேலை பார்த்ததாகவும், அப்போது திடீரென அது புறப்பட்டு சென்றதாகவும் தகவல் பரவியது.

டிரைவர் இல்லாமல் என்ஜின் மட்டுமே ஓடியதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அதிகாரிகளுக்கு தெரிவித்து முத்தரசநல்லூரில் அதை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த இரண்டு விதமான தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இன்று காலை திருச்சி கோட்ட மண்டல முதன்மை பொறியாளர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட ரெயில் என்ஜின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com