அதுக்கு என்ன பண்ண சொல்ற..?

நடிகவேள் எம்.ஆர்.ராதா 125 படங்களில் நடித்திருக்கிறார். தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றிவிழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா
Published on

1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், ‘மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார் ராதா.

நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவது போல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். ‘ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.’ ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.

“பெரியார் வந்திருக்கார்... கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க”

“எதுக்கு?”

“நாடகம் பார்க்கத்தான்”

“பார்த்துட்டுப் போகட்டும்”

“உட்கார வைக்க இடம் இல்லையே”

“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்”

“இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க..” “என்னை விடப் பெரியவங்களா  வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை”

மேனேஜரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.

இடைவேளை நேரம்‌. மேடையேறினார் அண்ணா... “அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி. எம். ஆர். ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி” என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

-அம்ரா பாண்டியன்

X

Maalai Malar
www.maalaimalar.com