பெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்

யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் விமர்சனம்.
டாணா விமர்சனம்
டாணா விமர்சனம்
Published on

ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பாண்டியராஜன். இவர் உயரம் குறைவாக இருப்பதால் போலீசுக்கு தேர்வாகாமல் போகிறார். இதனால் தன்னுடைய மகன் வைபவை போலீசாக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

ஆனால், அவருக்கு உணர்ச்சி வசப்பட்டாலோ, கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடுவதால், போலீசாகாமல் இருக்கிறார். இந்நிலையில், இவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்காக போலீசாக வேண்டும் என்று வைபவ் முடிவு செய்கிறார்.

இவரது போலீஸ் முயற்சிக்கு தடங்கல் வருகிறது. அது என்ன தடங்கல்? பிரச்சனையை சமாளித்து வைபவ் போலீஸ் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கே உரிய இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். வைபவ் - யோகிபாபு கூட்டணி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

வைபவிற்கு அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மா உமா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சைலண்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஹரிஷ் பெராடி. 

போலீஸ் கதையை எடுத்து, அதில் பாரம்பரியம், காதல், காமெடி என்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி. குறிப்பாக இதில் டேட்டா பேஸ் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் என தனிமனித ரகசிய தகவல்களை திருடுதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சிவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘டாணா’ காமெடி கலாட்டா.

X

Maalai Malar
www.maalaimalar.com