

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அறம்'. நயன்தாரா முன்னணி கதபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கினார். `அறம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோபி நயினார் அடுத்ததாக சித்தார்த்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் கோபியிடம் கேட்ட போது, அடுத்த படம் குறித்து சித்தார்த்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உறுதியான பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
சித்தார்த் நடிக்க இருப்பது `அறம்' படத்தின் இரண்டாவது பாகமா என்று கேட்ட போது, இது முற்றிலும் மாறுபட்ட கதை என்றார். நயன்தாரா தற்போது பிசியாக இருப்பதால் இந்த படத்தை முடித்த பின்னர், `அறம்' படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என்று கோபி கூறியிருக்கிறார்.
சித்தார்த் தற்போது கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் `சைத்தான் கா பச்சா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர `கம்மார சம்பவம்' என்ற மலையாள படமொன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.