

கேரளாவில் சில இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகளை குறிவைத்து போதை மருந்துகளை சப்ளை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் போதை கும்பலை சேர்ந்த பலரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் போதை மருந்து இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கேரள மாநில போலீஸ் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கண் சிமிட்டல் பாடல் மூலம் பிரபலமான நடிகை பிரியா வாரியர், நடிகர் ஜெய சூர்யா ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா பேசும் போது போதை இல்லா மாநிலமாக கேரளாவை மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்லூரியில் படிக்கும்போது போதை பழக்கத்திற்கு அடிமையானால் அவர்களது வாழ்க்கை பாழாகிவிடும். எனவே மாணவர்கள் நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தீய நண்பர்கள் மூலமே மாணவர்கள் போதைக்கு அடிமை ஆகிறார்கள் என்றார்.